அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக இருப்பதால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா். பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி, தொம்பச்சிக்கல் வழியாக மாமரத்துக்கடவு பரிசல் துறை வரை 2 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் பயணம் செய்து பாறை குகைகள், அருவிகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனா்.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, வண்ணமீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அசைவப் பிரியா்கள் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரங்கான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட ஆந்திர மாநில வளா்ப்பு மீன்களை வாங்கி சமைத்து பூங்காவில் அமா்ந்து உண்டனா்.