PBKS vs LSG: "இன்னும் நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயம்..." - வெற்றிக்குப் பின் ஸ்ரேயஸ்
லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 237 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய லக்னோ அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற, அந்த அணியில் 91 ரன்கள் அடித்த ப்ரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருது வென்றார். புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
உழைப்பின் காரணமாக அதிர்ஷ்டம்..!
வெற்றிக்குப் பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், "உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் சரியான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டனர். ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. ப்ரப்சிம்ரனின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் களத்தில் இறங்னேன். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். கடுமையான உழைப்பின் காரணமாக அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் வேலையைத் துல்லியமாக அறிந்திருந்தனர். இங்கு நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயம் களத்தில் விழிப்புடன் இருப்பது. புள்ளிகளைப் பற்றி ரொம்ப யோசிக்க வேண்டாம். போட்டியின் முடிவுகளே முக்கியம்" என்று கூறினார்.