DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்...
``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும், தனியார்துறையில் இட ஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்குப் போராட்டம் அறிவிக்கப்படும். இதுவரை நடந்திராத போராட்டமாக அது இருக்கும். 50 ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்து வருகிறேன். நாமும் ஒருமுறை இந்தத் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை, எனக்கு அந்த ஆசையுமில்லை. அந்த ஆசை இருந்திருந்தால், கவர்னராக இருந்திருப்பேன், பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன், தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், அந்த ஆசை எனக்கு இல்லாமல் போய்விட்டது. உங்களுக்காக வாழ்கிறேன்.
`இந்த ஊமை ஜனங்களுக்காக உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள்' என்று தம்பி ஸ்டாலினிடம் வாதாடியிருக்கிறேன். நமக்குத் தேவையெல்லாம் உங்களின் ஒரு ஓட்டுதான். இவ்வளவு நாள் என்னுடைய பேச்சைக் கேட்டீர்கள், இடையில் மறந்தீர்கள். அன்று தனியாக 4 தொகுதிகளில் வென்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இது நமக்கு அசிங்கமா இல்லையா? நம்ம ஆளுங்க நமக்கே ஒட்டு போடல.

இனி அப்படி அப்படிச் செய்யக் கூடாது. அப்படி இருந்தீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படியென்றால் உங்களின் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்.எல்.ஏ என்றெல்லாம் பார்க்க மாட்டேன், கடலில் வீசிவிடுவேன். சில பேர் கூட்டணி எங்கு என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றிப் பேசுவதற்கு நான் இருக்கிறேன். நான் முடிவு செய்வேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு 87 வயது. கிழவனுக்கு வயசாகிடுச்சுனு ஏமாற்றப்பார்க்காதீர்கள். ஒழுங்காகக் கட்சியைப் பலப்படுத்துங்கள். என்னால் உழைக்க முடியாது என்பவர்கள் சொல்லுங்கள், வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கிறேன். " என்று கூறினார்.