கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
’தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு’ என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கவிதை வரிகளால் நமக்கு உணர்வூட்டிய திராவிடக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடெங்கும் அரசின் சார்பில் தமிழ்க் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.
தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பலன் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்தந்த துறை சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு துறையைச் சார்ந்த அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டதுடன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்காக ஒவ்வொரு துறைக்கும் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் பதிலுரைகள் அளித்து, பலவற்றை நிறைவேற்றிடவும் உறுதி அளித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெறும் இந்த வழக்கமான நடவடிக்கைகள் மட்டுமின்றி, இந்தக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்வுகள் நிறைவேறியும் பதிவாகியும் உள்ளன.
மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் அனைத்தையும் ஆளுநர்களின் எதேச்சாதிகாரப் பிடியிலிருந்து மீட்டெடுக்கக் கூடிய பல முக்கிய அம்சங்களையும் தீர்ப்புரையில் தெரிவித்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில், 1974-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானத்தின் 51-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மகத்தான தீர்ப்பு கிடைத்திருப்பதுடன், ஏப்ரல் 15 அன்று மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, மாநிலத் திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் சட்டப்பேரவையில் வெளியிட்டேன்.
எல்லார்க்கும் எல்லாம் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அவர்களுக்கான நியமனப் பதவிகளை உருவாக்கும் வகையில் இரண்டு சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவையும் உங்களில் ஒருவனான நான் பேரவையில் கொண்டு வந்து அவற்றைச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதை வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்த மாற்றுத்திறனாளிகள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்த காட்சி இன்றும் மனதில் நிறைந்திருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சி தொடங்கி ஊராட்சி அமைப்புகள் வரை ஏறத்தாழ 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக நியமனம் பெற்று தங்களுக்கான உரிமைகளைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆட்சிச் சக்கரத்தைச் சுழல வைக்கும் கைகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே தனி அக்கறை கொண்ட இயக்கமாகும். முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், நிதி நிலையைச் சீர் செய்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை திராவிட மாடல் அரசு நிறைவேற்றும் என்று உத்தரவாதம் அளித்திருந்தேன். மாநில அரசின் சொந்த நிதி வருவாயினைப் பெருக்கி, அவர்களின் 9 முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள், குறிப்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ள மாநிலங்கள் செயல்படுத்தும் திராவிட மாடல் அரசின் திட்டம் என்பது குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கும் திட்டம். தமிழ்நாட்டில் முதன்முறையாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்கவேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன.
நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். மாநில உரிமைகளுக்கான குரலை நாம் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியஅரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம்.
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்.
நம்முடைய இந்த உறுதியை சிறு சிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து பார்த்தனர். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்னையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.
சட்டப்பேரவை என்பது சத்தமன்றம் அல்ல. ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், எதிர்க்கட்சியினராக இருந்தாலும், தோழமைக் கட்சியினரும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்கான ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கின்ற இடமாக இருக்க வேண்டும் என்பதில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவுடன் செயல்பட்டு வருகிறது. அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக்கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் அப்பாவு, அவை முன்னவர் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அவையில் ஏற்பட்ட விவாதக் கொதிநிலையினை குளிர் நிழலாக்கித் தந்தனர். பேரவைத் தலைவர் எதிர்க்கட்சியினருக்குரிய நேரத்தை அதிகமாக ஒதுக்கி, ஜனநாயகம் என்கிற நாணயத்தின் மறுபக்கமாக எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்பதற்கான வாய்ப்பினை வழங்கினார். ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரம், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் ஆகியவற்றை விரிவாகவே எடுத்துரைத்து, திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்ற ஜனநாயகம் முந்தைய ஆட்சியைவிட ஆக்கப்பூர்வமாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராதததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.
ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்” என்று.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!