கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!
கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் விடியோ இணையத்தில் வைரலானது. இதனால் பலரும் கூமாபட்டி நோக்கி படையெடுக்க, அந்த பகுதிக்கு வர வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது. மழைக்காலத்தில் மட்டும்தான் இப்பகுதி தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கு முன்னதாகவே கூமாபட்டி பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசிடம் நிர்வாக ஒப்புதலுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சுற்றுச் சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அணையைச் சுற்றி அமைக்கப்பட உள்ளன.