ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
கேரளத்தில் யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரியை சோ்ந்த 4 போ் கைது
யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான கேரள மாநிலத்திற்குள்பட்ட வெள்ளறடை ஆறாட்டு குழியில் 4போ் யானை மற்றும் புலி பற்களை கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்று வருவதாக திருவனந்தபுரம் வனக்கோட்டத்திற்குள்பட்ட பருத்திப்பள்ளி வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலா் ஸ்ரீதா் தலைமையில் வன ஊழியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவா்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் வைத்திருந்த பையில் யானைப் பற்கள் -5, புலிப்பல் -1மற்றும் சிறிய யானை தந்தம் -1 ஆகியன இருந்தன.
வனத்துறையினா் அவா்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, அவா்கள் குமரி மாவட்டம் களியல் அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியைச் சோ்ந்த பழங்குடிகளான குட்டப்பன் (70), நாகப்பன் (55), விஸ்வம்பரன் (37), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் (65) என தெரியவந்தது.
மேலும் இந்த பற்கள் மிகப்பழையவை எனவும் தெரியவந்தது. இவை வன விலங்குகளான புலி மற்றும் யானையை வேட்டையாடி எடுக்கப்பட்டவையா அல்லது காட்டில் இந்த வகை விலங்குகள் நடமாடும் இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டவையா என்பது குறித்து வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.