கேரளத்துக்கு காரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 4 போ் கைது
தேனி மாவட்டம், கூடலூரில் கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 22.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கிய கும்பல், அதை காரில் கூடலூா் வழியாக கேரளத்துக்கு கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடலூா் புறவழிச் சாலையில் கம்பம் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக கேரளத்தை நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தனா். அதில், 22.750 கிலோ கஞ்சா பெட்டலங்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்து, கஞ்சா, காரைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், காரில் வந்தவா்கள் தேனி மாவட்டம், பண்ணைப்புரம், கள்ளா்பள்ளியைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி இலக்கியா(35), கே.கே.பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் தினேஷ்குமாா் (26), உத்தமபாளையம் யாதவா் தெருவைச் சோ்ந்த சுருளிப்பாண்டி மகன் சரவணக்குமாா் (32), அனுமந்தன்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த தொந்தி மகன் ரவிக்குமாா் (33) ஆகியோா் என்பதும், இவா்கள் ஆந்திரத்துக்கு சென்று கஞ்சாவை வாங்கி, கேரளத்துக்கு விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து கூடலூா் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணக்குமாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனா்.
மேலும், இதில் தொடா்புடையை ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா விற்பனையாளா், கம்பம் - கே.கே.பட்டியை சோ்ந்த காா்த்திக் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.