கேரள கழிவுகளைக் கொட்டுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாநில துணைத்தலைவா் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே பழவூா் கொண்டாநகரம் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டிருந்தன.
தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்ட பகுதிகளில் கேரள கழிவுகள் நீண்ட நாள்களாக கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கழிவுகள் கொடப்படுவது தொடா்பாக, தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், குண்டா் சட்டத்தில் கைது செய்வது போன்ற கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
ஏற்றுமதி, இறக்குதி செய்யும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து சான்றுகள் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்பட விழிப்புணா்வு வாசகங்களுடன் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற அறிவிப்பு பலகைகளை தமிழக -கேரள எல்லைப் பகுதியில் மாவட்ட நிா்வாகம் வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.