கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா(34). 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றார்.
2011-ம் அண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்துடன் ஏமன் நாட்டில் வசித்துவந்தார்.

2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிமிஷாவின் கணவர் டாமி தாமஸும், மகளும் கேரளா திரும்பினர்.
ஏமன் நாட்டில் தனியாக தங்கி பணியாற்றிவந்தார் நிமிஷா பிரியா. அங்குள்ள மருத்துவமனை பணியை உதறிவிட்டு, தனியாக கிளீனிக் தொடங்கினார் நிமிஷா. ஏமன் நாட்டு விதிப்படி, அந்நாட்டு குடிமகனால் தான் கிளீனிக் தொடங்கமுடியும். எனவே, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு, கிளீனிக் தொடங்கினார்.
கிளீனிக் தொடங்கிய சமயத்தில் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிய தலால் அப்துல் மஹ்தி, ஜாயிண்ட் அக்கவுண் மூலம் பணத்தை எடுத்துவிட்டு நிமிஷா பிரியாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துவிட்டு, அவரை உடலளவிலும், மனதளவிலும் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலால் அப்துல் மஹ்தியிடம் இருந்து தப்பிப்பதற்காக, 2017 ஜூலை 25-ம் தேதி அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிமிஷா பிரியா போலீஸில் சிக்கினார். அந்நாட்டுச் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொடுமைப்படுத்தியதால்தான் கொலை செய்ததாக நிமிஷா பிரியா வாதிட்டும் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதே சமயம் கொலையான தலால் அப்துல் மஹ்தி-யின் குடும்பத்தினர் மன்னித்தால் நிமிஷா பிரியா தண்டனையில் இருந்து தப்ப முடியும்.
நிமிஷா பிரியாவை மன்னிப்பதற்காக ஒரு மில்லியன் டாலர் பிளட் மணி கேட்டனர் தலால் அப்துல் மஹ்தி குடும்பத்தார். அது இந்திய மதிப்பில் 8.57 கோடி ரூபாய் ஆகும். அந்த தொகையை செலுத்த முடியாமல் தவித்தது நிமிஷா பிரியாவின் குடும்பம்.

இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை வரும் 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.