குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ
கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்றளவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தநிலையில் அதே மருத்துவமனையில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நிதி முறைகேட்டு வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. அக்கல்லூரியில் நடைபெற்ற நிதி மோசடியில் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கல்லூரியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகள் 420, 409, 467, 468, 7 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில், சந்தீப் கோஷ் உள்பட அஃப்சர் அலி, பிப்லாப் சின்ஹா, சுமர் ஹஸ்ரா, ஆஷிஷ் பாண்டே 5 பேர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, நீதி விசாரணை ஜூலை 22முதல் தொடங்கவுள்ளது என்று திங்கள்கிழமை(ஜூலை 14) அதிகாரிகள் தெரிவித்தனர்.