கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு புலனாய்வுத் துறைக்கு மாற்றம்!
சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படுவதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாணவி ஒருவரை முன்னாள் மாணவர் உள்பட மூன்று மாணவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
படுகாயமடைந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையை அவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் விடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, மனோஜித் மிஷ்ரா(31), ஸைப் அஹமது(19) மற்றும் பிரமீத் முக்கோபாத்யாய்(20) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான முன்னாள் சட்ட மாணவா் மனோஜித் மிஷ்ரா, திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி முன்னாள் நிா்வாகி எனத் தெரியவந்ததை அடுத்து, மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூவரையும் கொல்கத்தா காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், புலனாய்வுத் துறைக்கு வழக்கை மாற்றுவதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை நினைவூட்டுவதாக தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.
Kolkata Police have said that the case of sexual assault of a law college student is being transferred to the Detective Investigation Department.