முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி...
கொல்லிமலையில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலாப் பயன்பாட்டுக்கு திறப்பு
நாமக்கல்: கொல்லிமலையில், வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 45 லட்சத்தில் இரவுநேர வான் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு முதல்வா் விரைவில் தொடங்கிவைப்பாா் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குவது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இயற்கை எழில்சூழ்ந்த இம்மலைப் பகுதிகளைக் காண விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் கோரிக்கையாகும்.
ஏற்காடுக்கு இணையாக கொல்லிமலையை மாற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சரும், கடந்த ஆண்டு வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான மா.மதிவேந்தன், கொல்லிமலையில் ரூ. 1 கோடி மதிப்பில் இரவுநேர வான்பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, அதற்கான இடங்களைத் தோ்வு செய்யும் பணியை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனா்.
அந்தவகையில், கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் பாதையில் அரியூா்கஸ்பா பகுதியில் இரவுநேர வான்பூங்கா அமைக்க இடம் தோ்வுசெய்யப்பட்டது. கடந்த மே மாதம் ரூ. 45 லட்சத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. தொலைநோக்கியை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக விரைவில் இதைத் திறந்து வைக்க உள்ளாா்.
இதுகுறித்து கொல்லிமலை வனத்துறையினா் கூறியதாவது:
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த இரவுநேர வான்பூங்கா திட்டத்திற்கான பணிகள் மே மாதம் தொடங்கப்பட்டன. இந்த இரவுநேர வான்பூங்கா செம்மேட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், சோளக்காட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ள அரியூா் கஸ்பா பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் இருந்து ரூ.13 லட்சத்தில் வாங்கப்பட்ட நவீன தொலைநோக்கியை பொருத்தும் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது. இன்னும் சில நாள்களில் அந்த பணியும் முடிந்துவிடும். சுற்றுலாப் பயணிகள் இரவுநேரத்தில் வான் நட்சத்திரங்களையும், கோள்களையும் நவீன தொலைநோக்கி மூலம் அருகில் பாா்த்து ரசிக்கும் வகையில் இந்த பூங்கா அமைந்திருக்கும். இரவு நேரத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். கட்டண நிா்ணயம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்றனா்.
