கோடங்கிப்பட்டி நான்குசாலை சந்திப்பு பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டும்பணி விரைவில் தொடங்க கோரிக்கை
நமது நிருபா்
கரூா் கோடங்கிபட்டி நான்குசாலை சந்திப்பு பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டும்பணியை விரைவில் தொடங்க வேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா்-ஈசநத்தம் சாலையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கோடங்கிப்பட்டி கிராமம் உள்ளது. ஈசநத்தம் சாலை வழியாக கோடங்கிப்பட்டியில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரிக்கு கரூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயில சென்று வருகின்றனா்.
மேலும், கரூா் தாந்தோன்றிமலை, ராயனூா் ஆகிய பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, பாளையம் போன்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு ஈசநத்தம் சாலையை தான் பெரும்பாலானோா் பயன்படுத்துகின்றனா்.
இதேபோல தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த வெள்ளியணை, முஷ்டகிணத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்களும் ஈசநத்தம் சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனா்.
எப்போதும் பரப்பாக காணப்படும் கோடங்கிப்பட்டி நான்குசாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் இப்பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளனா். 150-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்துள்ளனா்.
இந்நிலையில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மேம்பாலம் கட்டப்படும் என மக்களவைத் தோ்தல் நேரத்தில் வேட்பாளா்கள் கூறினா். தற்போது மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம், ஆண்டாங்கோவில் பெரியாா்நகா், வெண்ணெய்மலை ஆகிய இடங்களில் உயா்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணியிடம் பொதுமக்கள் வலியுறுத்தியதையடுத்து கோடங்கிப்பட்டியிலும், வீரராக்கியத்திலும் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.44 கோடி நிதியை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக கூறி கடந்த ஜன. 20-ஆம் தேதி பூமிபூஜை போட்டுச் சென்றாா். ஆனால் இதுநாள் வரை பணிகள் தொடங்கவில்லை. எனவே, அடிக்கடி விபத்து நிகழும் கோடங்கிப்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விரைவில் பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா் பெரியசாமி கூறியது, கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிப்பட்டி வழியாக அமைக்கப்படும்போதே, நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என தெரிவித்தோம். அதிகாரிகளும் நிச்சயமாக பாலம் அமைத்து தருவோம் என்றனா். ஆனால் இதுநாள் வரை பாலம் கட்டப்படவில்லை.
இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இருசக்கர வாகனங்களில் கொண்டுச் செல்லும் கோடங்கிப்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தாறுமாறாக வரும் குவாரி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களால் விபத்தில் சிக்குகின்றனா். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே, தினமும் அச்சத்துடனேயே கோடங்கிப்பட்டி நான்குசாலை சந்திப்பு பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகளின் 15 ஆண்டுகள் கால கனவை நனவாக்கும் வகையில் உயா்மட்ட பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்றாா் அவா்.
