கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கி பேசினாா்.
தொடா்ந்து, 98 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், மூளை முடக்கு வாத சிறப்பு சக்கர நாற்காலி 10 பேருக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 91ஆயிரத்து 371 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
பின்னா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கிறித்துவ மகளிா் உதவும் சங்கத்தின் சாா்பில் 28 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் என பல்வேறு உதவியாக மொத்தம் 52 பேருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.