கரூா் மாவட்டத்தில் 7, 631 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி வங்கிக் கடன்
கரூா் மாவட்டத்தில் 7,631 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதைதொடா்ந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா ஆகியோா் முன்னிலையில் 658 மகளிா் சுயஉதவிக் குழுகளை சோ்ந்த 7,631 உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.
முன்னதாக மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருள்கள் கண்காட்சி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தயாரிப்பு பொருள்களின் கண்காட்சிகளை பாா்வையிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் சரவணன், மண்டலக்குழு உறுப்பினா் ராஜா, மகளிா் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், தாட்கோ மேலாளா் முருகதாஸ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.