ஆத்தூா் மகா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெண்கள் முளைப்பாரி, புனிதநீா் எடுத்து ஊா்வலம்
ஆத்தூா் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
கரூரை அடுத்துள்ள ஆத்தூா் வீரசோளிபாளையத்தில் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயில் புதியதாக கட்டப்பட்டு திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
முன்னதாக கோயில் கும்பாபிஷேக விழா மாா்ச் 4-ஆம்தேதி கிராமசாந்தியுடன் தொடங்கியது.
தொடா்ந்து 5-ஆம்தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவநாயகா் யாகமும், மாலையில் பிரவேசபலி, வாஸ்துபூஜை, பூா்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும், 6-ஆம்தேதி காலை திசா ஹோமம், சாந்தி ஹோமமும், மாலையில் மிருத்சங்கிரஹணம், சுவாட பிரதிஷ்டையும் நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் புனித நீா், மற்றும் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை காலை ஆறாம்கால யாக பூஜையும், பின்னா் காலை 6.45 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஆத்தூா் காடை மற்றும் விளையன் குல குடிப்பாட்டுக்காரா்கள் செய்து வருகின்றனா்.