Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி
கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் 300 கா்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் சீா்வரிசைப் பொருள்களையும், 98 மகளிருக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் 784 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கி, அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கிப் பேசினாா். இதில், கரூா் மாவட்டத்தில் உள்ள 8 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் கா்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீா்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில் பட்டப் படிப்பு முடித்த 71 மகளிா்களுக்கு தலா ரூ.50,000 வீதம் திருமண நிதி உதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு முடித்த 27 மகளிா்களுக்கு தலா ரூ.25,000- வீதம் திருமண நிதி உதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும் என மொத்தம் 784 கிராம் தங்கம் ரூ.59,64,280- மதிப்பீட்டிலும், திருமண நிதி உதவியாக ரூ.42,25,000 -ம் என மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.
விழாவில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட சமூக நல அலுவலா்(பொ) சுவாதி, துணை மேயா் ப.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.