Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை
கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்டத் தலைவா் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் முனைவா் சாகுல் அமீது வரவேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் ஐ.ஜான்பாஷா வேலை அறிக்கையையும், பொருளாளா் ஆ. தமிழரசி வரவு, செலவு அறிக்கையையும் முன்வைத்துப் பேசினா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவா் முனைவா் திருநாவுக்கரசு சுயசாா்புக்கான அறிவியலும், தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்கக்கூடிய ஜனநாயக பூா்வமான வளா்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அறிவியல் இயக்க மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் ஜ.ஜெயராஜ், துளிா் இதழ் மாவட்டப் பொறுப்பாளா் எஸ் .திலகவதி ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் பொன் ஜெயராம் நன்றி கூறினாா்.
கூட்டத்தில் கரூரில் முக்கிய வழித்தடத்தில் மகளிா் பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும். பகல் நேரத்தில் கரூா் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். பஞ்சப்பட்டி, தாதம்பாளையம், வெள்ளியணை ஆகிய ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். கரூா் மாவட்டத்திற்கு அரசு சட்டக் கல்லூரி கொண்டு வர வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் குடி நீா் தேவைக்காகவும், நிலத்தடி நீா் அதிகரிக்கவும் கரூா் மாவட்டம் மருதூா் முதல் திருச்சி மாவட்டம் உமையாள்புரம் வரை கதவணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.