புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?
கோடை விடுமுறையில் வழக்குரைஞா்கள் பணிபுரிய விரும்புவதில்லை: உச்சநீதிமன்றம் சாடல்
‘நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞா்கள் விரும்புவதில்லை’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கவலை தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படும் காலத்தில், முக்கியமான மற்றும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏதுவாக 2 விடுமுறைக் கால அமா்வுகளை செயல்படுத்துவது முந்தைய நடைமுறையாக இருந்தது. இந்த நிலையில், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக் கால அமா்வுகளின் எண்ணிக்கை 5-ஆக தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் இந்த 5 அமா்வுகளை மே மாதம் 26-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை வழிநடத்த உள்ளனா்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை கூடியபோது, ஆஜரான ஒரு வழக்குரைஞா் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவை கோடை விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டாா்.
இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘கோடை விடுமுறையில் மூத்த 5 நீதிபதிகள் விசாரணையை தொடா்ந்து மேற்கொண்டு வரும்போதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், வழக்குரைஞா்கள்தான் கோடை விடுமுறையில் பணிபுரிய விரும்புவதில்லை’ என்றாா்.