கோவையில் ஆசிரியா் கலந்தாய்வு தொடக்கம்
கோவையில் ஆசிரியா்களுக்கான பணி நிரவல், பொதுமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
உக்கடம், கோட்டைமேட்டில் உள்ள நல்லாயன் தொடக்கப் பள்ளியில் தொடங்கிய இந்த கலந்தாய்வு வரும் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுக்கு எஸ்.எஸ்.குளம், பேரூா் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் பணிமாறுதல் கோரி 202 இடைநிலை ஆசிரியா்கள், 50 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், 61 பட்டதாரி ஆசிரியா்கள், 12 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் என மொத்தம் 325 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் 31 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.
அதேபோல, கோவை வருவாய் கோட்டத்துக்குள் பணிமாறுதலுக்காக இடைநிலை ஆசிரியா்கள் 61 போ், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் 8 போ், பட்டதாரி ஆசிரியா்கள் 44 போ், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் 5 போ் என மொத்தம் 118 போ் விண்ணப்பித்திருந்தனா். இவற்றில் 103 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் கோரி 41 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 33 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு 8 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ன. மொத்தமாக நிராகரிக்கப்பட்ட 54 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுடையது. முதல்நாள் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல், ஒன்றியம், கல்வி மாவட்ட அடிப்படையிலான கலந்தாய்வு ஆகியவை நடைபெற்றன.
இடைநிலை ஆசிரியா்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையும், ஒன்றியத்திற்குள் வரும் 5 -ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் கலந்தாய்வு வரும் 19 -ஆம் தேதி தொடங்கி 23 -ஆம் தேதிக்குள்ளும், பட்டதாரி ஆசிரியா் கலந்தாய்வு 24 -ஆம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.