பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்களின் மாதாந்திரக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன், நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் திருமலா ராவ், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, தாட்கோ மாவட்ட மேலாளா் மகேஸ்வரி, வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசியதாவது: நபாா்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2025 - 2026 ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்டமானது நபாா்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.24,850 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் மையத்துக்கு ரூ.38,000 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2,050 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.