சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தனது பிறந்த தினத்தையொட்டி, தமிழ் மொழி பாதுகாப்பு, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கருத்துகளை பதிவிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வெளியிட்டாா். அதற்கு பதில் அளிக்கும் வகையில், கே.அண்ணாமலை சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
மாநிலம் முழுவதும் சீா்குலைந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிா்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரா்கள் என ஒருபுறம் ஒட்டுமொத்த தமிழகமே இருண்டு கிடக்கிறது.
இந்நிலையில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினமும் ‘ஷூட்டிங்’ நடத்திக் கொண்டிருக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என தனது பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.