சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது
தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூலை 17 அன்று இரவு 10.25 மணியளவில் துவாரகா பகுதியில் உள்ள சுா்ஹேரா மோா் அருகே இரண்டு நபா்களுடன் ஒரு காரை போலீஸாா் வழிமறித்தனா். வாகனத்தை சோதனை செய்து, அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது, காவல் குழு இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 23 தோட்டாக்களை பறிமுதல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் பவானாவைச் சோ்ந்த தினேஷ் குமாா் மான் (42) மற்றும் ஹரியாணாவின் பானிபட்டைச் சோ்ந்த தேவேந்தா் (எ) ஷூட்டா் 40 என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
நவீன் காட்டியின் நன்கு அறியப்பட்ட கூட்டாளி தேவேந்தா். அவா் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட 13 முந்தைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தினேஷ் குமாா் மான் மீது இரண்டு முந்தைய குற்றவியல் தொடா்புகள் உள்ளன.
விசாரணையின் போது, கொள்ளைக்காரரான நவீன் காட்டியிடமிருந்து துப்பாக்கிகளை லாபத்திற்காக விற்பனை செய்வதற்காக வாங்கியதாக இருவரும் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், மிட்ரான் கிராமத்தில் இருந்து நவீன் காட்டி பின்னா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நவீன் காட்டி (50) மீது 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.