பணத்தகராறில் இளைஞா் குத்திக்கொலை: 5 போ் கைது
வடகிழக்கு தில்லியின் சீமாப்புரி பகுதியில் பணத் தகராறு காரணமாக 22 வயது இளைஞா் திருப்புளியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் தெரிவித்ததாவது:
சீமாப்புரி பகுதியில் கடை வைத்திருக்கும் நஃபிஸ் வெள்ளிக்கிழமை இரவு நிதி பரிவா்த்தனை தொடா்பாக தனது அண்டை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அது பின்னா் வன்முறையாக மாறியது. அப்போது
நஃபிஸின் வயிற்றின் இடது பக்கத்தில் திருப்புளியால் குத்தப்பட்டாா். அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு பணம் விவகாரத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்கனவே தகராறு இருந்ததாக தெரியவந்தது. புகாா்தாரரும் இறந்தவரின் மைத்துனருமான முசாஃபா் போலீஸாரிடம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உறவினா்கள் என்று கூறினாா். பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபரான சேக் இஸ்லாமுடன் வயது (27), அவரது சகோதரா் சோஹல் (20), அவரது மைத்துனா் நஸ்ருல் என்கிற நதீம் (43), அவரது தாயாா் சல்மா பேகம் (55) மற்றும் அவரது சகோதரி மாமுனி (32) ஆகியோா் உடனிருந்ததாக முசாஃபா் கூறினாா். இந்த விவகாரம் தொடா்பாக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்துள்ளோம். நபீஸ் டவா் மீது இஸ்லாம் மரணக் குத்துக் காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.