எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்ப...
சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!
சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய மோசடி தொடர்பாக சித்ரதுர்காவைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரேந்திராவை அமலாக்கத்துறை சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தது.
பந்தய மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் நேற்று (ஆகஸ்ட் 22) பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா சிக்கிமில் உள்ள காங்டாக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் கேங்டாக், சித்ரதுர்கா, பெங்களூரு, ஹூப்ளி, ஜோத்பூர், மும்பை மற்றும் கோவா உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில்
அமலாக்கத்துறையின் பெங்களூரு மண்டல அலுவலகத்தால் சோதனைகள் நடத்தப்பட்டன. கோவாவில் மட்டும், ஐந்து முக்கிய கேசினோக்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக, ரூ.1 கோடி வெளிநாட்டு பணம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 10 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் நான்கு சொகுசு வாகனங்கள் உள்பட கிட்டத்தட்ட ரூ. 12 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும், 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டன. கே.சி. வீரேந்திராவின் சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் அவரது மகன் பிருத்வி என். ராஜ் ஆகியோரின் வீட்டிலிருந்து சொத்து தொடர்பான பல ஆவணங்களும், பல இடங்களில் குற்றவியல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, சட்டமன்ற உறுப்பினர் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொடர்பு பல மாநிலங்களில் பரவியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் சட்டவிரோத பந்தய வலையமைப்புமூலம் உருவாக்கப்பட்டவை என்று நிறுவனம் சந்தேகிக்கிறது.
குற்றச் செயல்களை மேலும் அடையாளம் காண கே.சி. வீரேந்திரா காங்டாக்கில் கைது செய்யப்பட்டு, காங்டாக் நீதித்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் பெங்களூருவில் உள்ள அதிகார வரம்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகப் போக்குவரத்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.