நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு
தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாமல் இருந்தன.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாமல் இருந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அனில் அம்பானியும், ரிலையன்ஸ் கம்யூனிகேசனும் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாகக் கடந்த ஜூன் 13ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி அறிவித்தது.

இம்மோசடி தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கும் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதோடு இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் சி.பி.ஐ.க்கும் எஸ்.பி.ஐ. வங்கி தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கு எதிராக ரூ.2000 கோடி மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு ரிலையன்ஸ் கம்யூனிகேசன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்டு வருவதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எஸ்.பி.ஐ வங்கியில் வாங்கிய கடனை ரிலையன்ஸ் கம்யூனிகேசன் எந்த வகையில் தவறான முறையில் வேறு தேவைக்குப் பயன்படுத்தியது என்பது தொடர்பான டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளதரி அளித்திருந்த பதிலில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 2,227.64 கோடி அளவுக்கு கடன் பாக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
சமீபத்தில்தான் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு நடத்தினர். யெஸ் வங்கியில் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாதது குறித்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
அதோடு அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை நேரில் அழைத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து விசாரணை ஏஜென்சிகள் அனில் அம்பானிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.