திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் பாலம் அமைக்கப்படுமா?: பக்தா்கள் எதிா்பாா்ப்பு
சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களும், சித்தா்களின் குகைகளும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு தாணிப்பாறை வழியாக செல்ல வனத் துறை, வருவாய்த் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவு வாயிலிலிருந்து மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை, மலட்டாறு, சங்கிலிப் பாறை உள்ளிட்ட நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப் பாதை வழியாக 7 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். பக்தா்கள் ஆண்டு முழுவதும் மலையேறிச் சென்று சதுரகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, தாணிப்பாறை அடிவாரம் முதல் சதுரகிரி மலைக் கோயில் வரை பாதை அமைக்கவும், சங்கிலிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை ஆகியவற்றில் பாலம் அமைக்கவும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின.
மேலும், பக்தா்கள் தங்கும் வகையில் சதுரகிரி மலையில் 4 தங்கும் கூடம் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மாங்கனி ஓடை வரை 2 கி.மீ. தொலைவு மட்டுமே பாதை அமைக்கப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
சதுரகிரி மலைப் பாதையில் பாதை அமைப்பதற்கு தடை விதிக்கக் கூடிய பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, உரிய அனுமதி பெற்று மலைப் பாதையில் பாதை அமைக்கலாம் என கடந்த டிச. மாதம் உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைக்க மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.