பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்
கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
நக்ஸல்கள் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2010-இல் 499 வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 267-ஆகக் குறைந்துள்ளது. அதுபோல 2010-இல் நக்ஸல்களால் அப்பாவி பொதுமக்கள், படைவீரர்கள் 343 பேர் உயிரிழந்த நிலையில், 2024-இல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆகக் குறைந்துள்ளது. இது 64% குறைவாகும்.
நக்ஸல்கள் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்காக எஸ்.ஆர்.இ. திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குதல், படைவீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தாக்குதல் நடத்துதல், சரணடைந்த நக்ஸல்களின் மறுவாழ்வுக்கு நிவாரணம் அளித்தல், வன்முறையால் உடைமைகளை இழந்த பொதுமக்கள், படைவீரர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுக்கு நிதி வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-20 முதல் இதுவரையிலான கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1925.83 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் ரூ.829.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் 43 சதவீதமாகும்.
அத்துடன் நக்ஸல்கள் பாதிப்பு மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் (எஸ்.ஐ.எஸ்.) நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தில் மொத்த ஒதுக்கீடு ரூ.394.31 கோடியில் சத்தீஸ்கர் மாநிலம் ரூ.85.42 கோடி பெற்றுள்ளது. இது 21.6 சதவீதமாகும்.
நக்ஸல்கள் பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிறப்புப் படைகள், சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள், மாவட்ட காவல் துறையை வலுப்படுத்த இந்த நிதி செலவிடப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 147 காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 700 காவல் நிலையங்களை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் சத்தீஸ்கரில் 125 காவல் நிலையங்கள் உள்பட 612 காவல் நிலையங்கள் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி நக்ஸல்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் அரசு கட்டடங்கள், சேவை குறைபாடுகளைப் போக்க சிறப்பு மத்திய நிதி (எஸ்.சி.ஏ.) ஒதுக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2019-20 முதல் இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2384.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ரூ.773.62 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
நக்ஸல்கள் பாதிப்புள்ள மாநிலங்களில் நிர்வாக மேலாண்மைக்காக மத்திய பாதுகாப்புப் படைகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.654. 84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் வாங்கவும், நக்ஸல்கள் பாதிப்பு உள்ள ராணுவ மையங்களில் முக்கிய உள்கட்டமைப்புகளுக்காகவும் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.