சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்
சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘கோப்ரா’ பிரிவு கமாண்டோ வீர மரணம் அடைந்தாா்.
இம்மாநிலத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் ஏற்கெனவே 27 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிஜாபூரில் மேலும் ஒரு நக்ஸல் தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பிஜாபூா் மாவட்டத்தில் உசூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் ‘கோப்ரா’ பிரிவினா் மற்றும் மாநில காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், கோப்ரா கமாண்டோ ஒருவா் வீர மரணம் அடைந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா். அவா் விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’ என்றனா்.
முன்னதாக, நாராயண்பூா்-பிஜாபூா்-தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் 2 நாள்களாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இடதுசாரி தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவா் பசவராஜு உள்பட 27 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் மாவட்ட ரிசா்வ் படை வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பில் வீரா் வீரமரணம்: இதனிடையே, 27 நக்ஸல்கள் கொல்லப்பட்ட நடவடிக்கையை முடித்துக் கொண்டு திரும்பிய மற்றொரு வீரா், தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தாா். நாராயண்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடந்தது.