சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினர் கைது! நாடுகடத்தும் பணி தீவிரம்!
புது தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புது தில்லியில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி குடியேறி வசித்து வந்த 121 வங்கதேசத்தினரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறிய இவர்கள் அனைவரும் கடந்த ஒரு வார காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 5 இந்தியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில், சட்டவிரோதமாக வெளிநாட்டவர் இந்தியாவில் குடியேற உதவி வரும் நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் இந்தியர்கள் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்களுக்கு தங்களது சொத்துக்களை வாடகைக்கு அளித்தது தெரியவந்துள்ளது.
இத்துடன், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாக தயாரித்து வழங்கும் நபர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?