Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.
2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற ரத்தன் லால் டாங்கி, ராய்ப்பூரின் சந்திரகுரியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாநில காவல் அகாடமியின் இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இவர் மீது கடந்த அக்டோபர் 15 அன்று காவல்துறை அதிகாரியின் மனைவி ஒருவர் சத்தீஸ்கர் டிஜிபி அருண் தேவ் கௌதமிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், ``காவல் துறைத் தலைவர் (ஐஜி) ரத்தன் லால் டாங்கி என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்துகிறார்.
இது தொடர்பாக வெளியில் கூறினால் என் கணவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இடமாற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் புகார் குறித்து விளக்கமளித்துப் பேசிய ரத்தன் லால் டாங்கிவ் ``புகார் அளித்திருக்கும் பெண் 2019-ம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலம்தான் என்னை தொடர்புகொண்டு பேசினார்.
என் மனைவியின் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். நீண்ட காலமாக அந்தப் பெண்தான் என்னை என் குடும்பத்தைவிட்டுப் பிரிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.
என்னைத் துன்புறுத்தி, பணம் பறித்து வருகிறார். அந்தப் பெண்ணால் என் குடும்பம் மனச்சோர்வடைந்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நான் போலீஸ் அகாடமியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன். யாரையும் இடமாற்றம் செய்வதற்கான அதிகரம் எனக்கு இல்லை.

நான் அவளைத் துன்புறுத்தினால் இதற்கு முன்பே புகார் அளித்திருக்கலாமே? இப்போது வந்து புகார் அளிக்க என்னக் காரணம்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விதிகளின்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.




















