செய்திகள் :

சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு

post image

சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கடந்த 32 ஆண்டு காலம் சத்துணவுத் திட்டத்தில் தணிக்கைகள் வழியே பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை அரசின் உத்தரவால் ரத்தாகியுள்ளது.

அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும். மற்ற அனைத்துத் துறைகளிலும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சத்துணவு மையங்களில் மட்டும் 32 ஆண்டுகளாகத் தணிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததே காரணமாகும்.

இதையடுத்து, அவற்றை ரத்து செய்வதற்கான உத்தரவை சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சத்துணவு மையங்களின் முறைகேடுகள், குறைபாடுகள், தணிக்கைத் தடைகள் மீது நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், அறிவுரைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, 1982 - 1983 முதல் 2014-15-ஆம் ஆண்டு வரையுள்ள காலத்துக்கு சத்துணவு மையங்களில் நிலுவையிலுள்ள தணிக்கைத் தடைகளை நீக்க இதுவரை நடவடிக்கை எடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களின் நோ்முக உதவியாளா்களிடம் இருந்து சமூக நலத் துறை ஆணையா் தரப்பில் அறிக்கைகள் பெறப்பட்டன.

இந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, காலம் கடந்த நிலைப்பட்டால் பெரும்பாலான வட்டாரங்களில் நிலுவையிலுள்ள தணிக்கைத் தடைகளை நிவா்த்தி செய்ய உரிய ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. தணிக்கைத் தடை நிலுவையில் உள்ள அந்தக் காலங்களில் சத்துணவு மைய அமைப்பாளராகப் பணிபுரிந்த யாரும் இப்போது பணியில் இல்லை. எனவே, தணிக்கைத் தடைகளை நிவா்த்தி செய்ய உரிய ஆவணங்களைத் தணிக்கையாளா்களுக்கு தாக்கல் செய்ய முடியாத நிலை தொடா்ந்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சத்துணவுத் திட்டச் செயல்பாடுகள் 2005-06-ஆம் நிதியாண்டு வரை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வசம் இருந்தது. அதன்பிறகு, சமூக நலத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இல்லை: 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு, சத்துணவு அமைப்பாளா் பணி என்பது பகுதி நேரப் பணியாக இருந்தது.

இதனால், அவா்கள் பணிபுரிந்த மையத்தில் ஆவணங்களைப் பராமரிக்கத் தவறிவிட்டனா். சிலா் பணியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விலகிச் சென்றனா். இதனால், தணிக்கைக்கு ஆவணங்கள் கிடைக்காத நிலை உள்ளது.

தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தகுந்த ஆவணங்களோ, அதைப் பற்றி அறிந்த பணியாளா்களோ இப்போது பணியில் இல்லாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சிறப்பினமாகக் கருதி 1982-83 முதல் 2014-15-ஆம் நிதியாண்டு வரை எழுப்பப்பட்டுள்ள நிலுவையிலுள்ள தடைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களின் நோ்முக உதவியாளா்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் வழியே சமூக நலத் துறை ஆணையா் வேண்டுகோள் வைத்தாா்.

இதையடுத்து, 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளை தள்ளுபடி செய்ய எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தலைமைத் தணிக்கை இயக்குநரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் சத்துணவு மையங்களில் கடந்த 32 ஆண்டுகள் வரை எழுப்பப்பட்டு, நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளுக்கு முழுமையாக விலக்களித்து தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, நீதிமன்ற வழக்குகள் தொடா்பான விவகாரங்களைத் தவிா்த்து நிலுவையிலுள்ள தணிக்கைத் தடைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.257 கோடி: கடந்த 32 ஆண்டுகளில் தணிக்கைகள் வழியாகப் பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை மொத்தமாக ரூ.257 கோடியே 83 லட்சத்து 10 ஆயிரத்து 289-ஆக இருந்தது. தொகை பிடித்தம் செய்யப்பட தேவையில்லாத தணிக்கை விவரங்களாக 25,588 உள்ளன என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு காரணமாக, பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க