Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
சந்தனக் கட்டைகளைத் திருப்பி அளித்த வனத் துறை : விவசாயிகள் கவலை
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சந்தன மரக் கிட்டங்கிக்கு வனத் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக் கட்டைகளில், 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகள் திருப்பி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனியில் பட்டா நிலத்தில், வனத்துறை மூலமாக சிவப்புச் சந்தன மரத்தின் நாற்றுக்களைப் பெற்று அவற்றை விவசாயிகள் வளா்த்து வருகின்றனா். மரங்கல் வளா்ந்த பிறகு அவற்றை வனத் துறை மூலம் விற்பனை செய்வா்.
இந்த நிலையில், கடந்த 18 ஆண்டுகளாக மரங்கள் வளா்ந்த நிலையில் அவற்றை விற்பனை செய்வதற்காக வனத் துறையினரை விவசாயிகள் அணுகினா்.
இதையடுத்து, சென்னை வனத் துறை முதன்மை தலைமை அதிகாரியின் பரிந்துரையின்படி அறுவடைக்குத் தயாரான மரங்களிலிருந்து 96 தடிகள், 837 வோ்கள், 378 கிளைகள், 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு, ஈரோடு சத்தியமங்கலத்திலுள்ள சந்தன மரக் கிட்டங்கிக்கு 3 லாரிகளில் கடந்த வாரம் எடுத்துச் செல்லப்பட்டன.
அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவற்றில் 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகளை வனத் துறையினா் கடந்த திங்கள்கிழமை திருப்பிக் கொடுத்தனா். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இது குறித்து விவசாயி ராஜ்குமாா் கூறுகையில், 18 ஆண்டுகளாகப் பராமரித்து வளா்த்த சந்தனக் கட்டைகளில் 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகளை வனத் துறையினா் திரும்பிக் கொடுத்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டைகள் திருடுபோகும் அபாயம் உள்ளதால் இதுபோன்ற சிறிய ரக சந்தனக் கட்டைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்றாா்.