தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய...
சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்! திமுக அரசுக்கு பாஜக கண்டனம்!
பள்ளி, கல்லூரி மாணவர்களின் விடுதிகளின் பெயர்களை சமூக நீதி விடுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற ஒரு நகைச்சுவை தான் சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்.
ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக அரசு விடுதிகளைத் தரம் உயர்த்தாத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும்வேளையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக பெயர் மாற்று அரசியலை செய்வது கண்டனத்துக்குரியது.
சமூக நீதி என்பது பெயரில் இருப்பதைவிட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது.
தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை. பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின்கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை சமூகநீதி விடுதிகள் என்ற ஒரே குடையின்கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பரத் திட்டம் அபத்தமானது. இது முழுக்க முழுக்க அரசியல்ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி.
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, போதிய ஆசிரியர்கள், குடிநீர், கழிப்பறை, தரமான உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, அவற்றின் பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.
மேலும், பொதுவெளியில் சாதிரீதியிலான கருத்துகளை முன்வைக்கும் தலைவர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டு, சாதிய இயக்கங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சாதியை ஒழிக்கப் போவதாக போலித்தன அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கு, பல போராட்டங்களாலும் உயிர்த் தியாகங்களாலும் பெறப்பட்ட சமூகப் பாதுகாப்பினை அழித்தொழிக்க எந்த உரிமையும் இல்லை.
கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு விடுதிகளை சீர்செய்வதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் பெயர்மாற்றத்தைக் கொண்டு அவலத்தை மூடி மறைக்க முயல்வது, ஒரு நல்ல தலைமைக்கு அழகல்ல.
எனவே. சமூக நீதி விடுதி என்ற பெயர்மாற்ற முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு மாணவர் விடுதிகளை சீர்செய்வதில் ஆளும் அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! நடப்பு கூட்டத்தொடரில் ரூ. 135 கோடி இழப்பு!