ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்
ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாகக் கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதால், தொடரானது 2-2 என சமனில் முடிந்தது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்றதால், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கிளன் மெக்ராத் கணிப்பு
நவம்பரில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாகக் கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி ரேடியோவில் அவர் அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன் போன்ற வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம். அதனால், ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு கடினமாக இருக்கப் போகிறது.
இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு மிகப் பெரிய தொடராக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட் உண்மையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் அவர் சதம் கூட அடித்தது கிடையாது. அதனால், சதம் விளாச வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருப்பார். அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஹாரி ப்ரூக் மிகவும் நன்றாக விளையாடுகிறார். அவரது விக்கெட்டினை விரைவில் வீழ்த்த ஆஸ்திரேலியா முயற்சிக்க வேண்டும். அதிரடியாக விளையாடக் கூடிய தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் இங்கிலாந்து அணியில் இருக்கிறார். ஸாக் கிராலி நன்றாக ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றார்.
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடைசி 15 டெஸ்ட் போட்டிகளில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.
இதையும் படிக்க: சிஎஸ்கே-விலிருந்து விலகுகிறாரா ரவிச்சந்திரன் அஸ்வின்?