காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ ஏற்றுமதிகளுக்குத் தடை! ஜெர்மனி அரசு அறிவிப்பு!
காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதிகளுக்கு, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தடை விதித்துள்ளார்.
காஸா மீதான தங்களது ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு நேற்று (ஆக.7) இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஒப்புதலளித்துள்ளது. இதற்கு, பல்வேறு நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நீண்டகால ஆதரவாளரான ஜெர்மனி இஸ்ரேலுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் பிரெய்ட்ரிச் மெர்ஸ் இன்று (ஆக.8) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹமாஸ் படையின் பயங்கரவாதத்தில் இருந்து, தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு எனவும், காஸாவின் எதிர்காலத்தில் ஹமாஸ் படைகளுக்கு எந்தவொரு பங்கும் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில், இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுதலை மற்றும் 22 மாதங்களாக நடைபெற்று வரும் காஸா மீதான போரை உரிய பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை மட்டுமே தங்களது முதன்மையான முன்னுரிமை எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் கூறியதாவது:
“காஸா மீதான தங்களது ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் திட்டத்துக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால், ஜெர்மனி அரசின் இலக்குகளை அடைவது எவ்வாறு என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், இத்தகைய சூழலில், காஸா பகுதியின் மீது பயன்படுத்தக் கூடிய எந்தவொரு ராணுவத் தளவாடத்தின் ஏற்றுமதிக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில், ஜெர்மனி அரசு அனுமதியளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!