காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!
ஆசியக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்!
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகள் படைக்கவிருக்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் முதல் போட்டியில் விளையாடுகிறது.
இந்தத் தொடரில் சக்திவாய்ந்த அணியாகக் கருதப்படும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக அணிக்குத் திரும்பவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 16 இன்னிங்ஸ்களில் 717 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகளை முறியடிக்கவிருக்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்கள்
சூர்யகுமார் இதுவரை 79 இன்னிங்ஸ்களில் 167.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2598 ரன்களை குவித்துள்ளார். இவர் 3000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 402 ரன்கள் தேவையாக உள்ளன.
இந்த ரன்களை எட்டும் பட்சத்தில் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 3000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார் சூர்யகுமார் யாதவ்.
டி20 போட்டிகளில் அதிக சதங்கள்
சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லை (இருவரும் 5 சதங்கள்) தொடர்ந்து, 4 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் சூர்யகுமார் உள்ளார்.
ஆசியக் கோப்பையில் அவர் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், இருவருடன் முதலிடத்தை சமன் செய்வார்.
டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்
இதுவரை 146 சிக்ஸர்கள் விளாசியுள்ள சூர்யகுமார் யாதவ், இன்னும் 4 சிக்ஸர்கள் விளாசும் பட்சத்தில் 150 சிக்ஸர்கள் விளாசியவர் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடிப்பார்.
இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா(205), மார்ட்டின் கப்தில் (173), முகமது வாசீம் (168) மற்றும் ஜோஸ் பட்லர் (160) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.