தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார் | செய்திகள்: சில வரிகளி...
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!
இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கைக் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல், இன்று (ஆக.8) எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
”நாட்டில் ஏற்படும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் பாதிப்புகளை, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நோய்கிருமிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இதில், கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும், 2025-ம் ஆண்டின் ஜூன் 30 ஆம் தேதி வரை குறைவான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அசாம், பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகம், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 11 மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் நிகழாண்டில் (2025) மொத்தம் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதில், அதிகப்படியாக அசாமில் 127 பாதிப்புகள் பதிவான நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மிகவும் குறைவாக 2 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 2020 ஆம் ஆண்டில் 729 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2021-ல் 787 பாதிப்புகளும், 2022-ல் 1,109 பாதிப்புகளும், அதிகப்படியாக 2024-ல் 1,472 பாதிப்புகளும் உறுதியாகியுள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்