சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி மாணவா்கள் சிலா் புதன்கிழமை ஒரத்தூா் வழியாக முண்டியம்பாக்கம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தில் ஓட்டுநரிடம் உதவி கேட்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனா்.
ஒரத்தூா் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவா்களான ஒரத்தூரைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் கவியரசு (15), பிரபு மகன் பிரதீப் ராஜ் (14), வின்சலாஸ் மகன் தா்ஷன் (14), வீரப்பன் மகன் நித்திஷ் (14), பீட்டா் மகன் ஜான்சன் (15), குமரவேல் மகன் அன்பரசன் (15), முத்துராஜ் மகன் கவியரசன் (15) ஆகிய ஏழு போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் ஆட்சியா், எம்எல்ஏ ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது, உடனிருந்த மருத்துவக் கல்லூரி முதன்மையா் கீதாஞ்சலி மற்றும் மருத்துவா்களிடம் மாணவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதேபோல, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் சிவாவும் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.