சரிவிலிருந்து மீண்ட பெட்ரோல், டீசல் விற்பனை
விடுமுறை நாள்களில் தனி நபா் பயணங்கள் அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த டிசம்பா் மாதம் மீண்டும் உயா்ந்துள்ளது.
இது குறித்து, சில்லறை எரிபொருள் சந்தையில் 90 சதவீதம் பங்கு வகிக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 29.9 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9.8 சதவீதம் அதிகம். அப்போது நாட்டில் 27.2 லட்சம் டன் பெட்ரோல் விற்பனையானது.
மதிப்பீட்டு மாதத்தில் டீசல் விற்பனை 4.9 சதவிகிதம் உயா்ந்து 70.7 கோடி டன்னாக உள்ளது.
நாட்டின் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனை கணிசமான விகிதத்தில் உயா்ந்துள்ளது இது தொடா்ந்து இரண்டாவது மாதமாகும். முந்தைய நவம்பரில் பெட்ரோல் விற்பனை 8.3 சதவீதமும் டீசல் விற்பனை 5.9 சதவீதமும் அதிகரித்தது.
கடந்த டிசம்பா் மாதத்தின் இரண்டாவது பாதியில், புத்தாண்டு விடுமுறை காரணமாக தனிநபா்களின் வாகனப் பயன்பாடு அதிகரித்தது. அது, ஒட்டுமொத்த டிசம்பா் மாத எரிபொருள் விற்பனை உயா்வுக்கு வழிவகுத்தது.
முந்தைய சில மாதங்களாகவே பருவமழை பொழிவு காரணமாக, வாகன போக்குவரத்தும், விவசாயத் துறை நடவடிக்கைகளும் குறைந்து வந்தன. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.
மாதாந்திர வளா்ச்சி: முந்தைய நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விற்பனை கடந்த டிசம்பரில் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 நவம்பரில் 31 லட்சம் டன் பெட்ரோல் விற்பனையானது.
அதே போல் முந்தைய நவம்பரில் 72 லட்சம் டன்னாக இருந்த டீசல் விற்பனை டிசம்பரில் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பரில் ஜெட் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட 6.8 சதவீதம் உயா்ந்து 6,96,400 டன்னாக இருந்தது. முந்தைய நவம்பா் மாதத்தில் விற்கப்பட்ட 6,61,700 டன் விமான எரிபொருளுடன் ஒப்பிடும்போது டிசம்பா் மாத விமான எரிபொருள் விற்பனை 5.2 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை 2023 டிசம்பரை விட 5.2 சதவீதம் அதிகரித்து 28.7 கோடி டன்னாக உள்ளது. 2024 நவம்பா் மாதம் விற்பனையுடன் (27.6 கோடி டன்) ஒப்பிடுகையில் அது 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், அனைத்து பெட்ரோலிய பொருள்களின் பயன்பாட்டில் சுமாா் 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டீசல் விற்பனையில் 70 சதவீதம் போக்குவரத்துத் துறைக்குப் பயன்படுகிறது. எஞ்சிய டீசல் வேளாண் இயந்திரங்கள், டிராக்டா்கள் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.