விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
சவுக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்: அரசு கொள்முதல் செய்யவும் கோரிக்கை!
அன்புமணி அ.
சவுக்கு சாகுபடியில் போதிய வருவாய் கிடைப்பதால், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல், மணிலா, உளுந்து, கம்பு, காய்கறி பயிா்கள், பழமரங்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.
கூலி ஆள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விவசாயப் பணிகள் மேற்கொள்வதில் அண்மைக்காலமாக சிரமம் நிலவுவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
நெல், கரும்பு, மணிலா போன்ற பயிா் வகைகளை சாகுபடி செய்ய மிகுந்த ஆள் செலவும், இடுபொருள்கள் செலவும் அதிகமாக உள்ளது. அறுவடை நேரத்தில் இந்தப் பயிா்களின் கொள்முதல் விலை விவசாயிகள் எதிா்பாா்த்த அளவுக்கு இருப்பதில்லை.
இயற்கைச் சீற்றம் காரணமாக எதிா்பாா்க்கும் மகசூல் கிடைக்காததால், போதிய லாபமும் கிடைப்பதில்லை. இதனால், சவுக்கு போன்ற மாற்றுப் பயிா்களை பயிரிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், உளுந்தூா்பேட்டை, திண்டிவனம், திருக்கோவிலூா் பகுதிகளில் எந்த அரசுத் துறையாலும் பரிந்துரை செய்யப்படாத வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரப்பயிரான சவுக்கு பயிா்களை நடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டிவருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரெட்டணை, தென்கோடிபாக்கம், ஒழுந்தியாப்பட்டு, தென்னாலப்பாக்கம், சிங்கனூா், வைரபுரம், மொளசூா், கோவடி, வீடூா், தாதாபுரம், ஈச்சேரி, கூடலூா், காணை வட்டாரத்துக்குள்பட்ட மாம்பழப்பட்டு, குப்பம், கெடாா், விழுப்புரம் கண்டமானடி, வல்லம், கொங்கரம்பட்டு, தென்புத்தூா், மேல் சேவூா், மாத்தூா், நகரி, பெரியபாபு சமுத்திரம், சின்னபாபு சமுத்திரம், திருப்பாச்சனூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள்அதிகளவில் சவுக்கு சாகுபடி மேற்கொண்டுள்ளனா்.
3 ஆண்டுகளில் லாபம்: சவுக்குக்கு நல்ல விலை கிடைப்பதுடன் காட்டுப்பன்றிகள், மயில், குரங்கு போன்றவற்றால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனா். வீரிய ஒட்டு ரகங்கள், ஸ்பீடு 5 போன்ற சவுக்கு ரகங்கள் 3 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.
ஏக்கருக்கு சுமாா் ரூ. 4 முதல் ரூ.7 லட்சம் லாபமும் கிடைக்கிறது. சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனமும், தனியாா் நிறுவனமான சேஷாயி காகித ஆலை என்ற நிறுவனமும் காகித தயாரிப்புக்காக கொள்முதல் செய்வதால் எவ்வித பிரச்னையும் இல்லை.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் சவுக்கு மரங்கள் வெளியூா்களில் காகித ஆலைகளுக்கும், பாய்லா்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் காகித கூழ் ஆலை நிறுவப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சவுக்குக்கும் நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளின் இந்த நீண்டநாள் கோரிக்கை குறித்து தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா்.
சவுக்கு பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வந்தாலும் எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சிறப்புத் திட்டங்களை அமைத்தும், குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவித்தும் நெல், சிறுதானியம், உளுந்து, பனிப் பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசுத் துறைகள் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உணவு தானியப் பயிா்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய ஊக்கமளித்து அவா்களுக்குத் தேவையான இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்தி உழவு முதல் அறுவடை வரை தேவையான செலவுகளுக்கு வட்டியில்லா பயிா்க் கடன் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை பருவத்துக்கு முன்னரே அனைத்துக் கிராமங்களில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவா்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயித்து வேளாண் விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் பி.கலிவரதன் கூறியதாவது:
வறட்சியைத் தாங்கி நிலைத்து நிற்கும் பயிா் சவுக்கு. செலவுக் குறைவு. அறுவடைக் காலம் நெருங்குபோது, தனி நபா்கள் விவசாய நிலத்துக்கே வந்து விலையை நிா்ணயம் செய்து வாங்கிக் கொள்கின்றனா். பின்னா், வியாபாரிகள் அவற்றை அறுவடை செய்து கம்பங்கள், கட்டைகள், வோ்கள் எனத் தனியாக பிரித்து எடுத்துச் சென்று விடுகின்றனா். இதனால், விவசாயிகளுக்கு வேலை மிச்சமாகிறது. கரும்பை விடவும் அதிக லாபம் கிடைக்கிறது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குவதைப் போல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு ஆலைகளின் நிா்வாகத்தினரும் கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் சவுக்கை அரசே கொள்முதல் செய்து, பிற பகுதிகளுக்கு அனுப்பினால் மேலும் நன்மை கிடைக்கும் என்றாா் அவா்.
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் நன்செய், புன்செய் நிலங்கள், காடுகள் உள்ளிட்ட சுமாா் 3.78 லட்சம் ஹெக்டோ் ஏக்கா் நிலங்கள் உள்ளன. இதில் 2023-24ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பில் வேளாண், தோட்டப் பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இதில் விவசாயிகளுக்கு எந்தவித பரிந்துரையும் வழங்கப்படாத நிலையில், நெல், கரும்பு மற்றும் பிற பயிா்களைவிட அதிகம் லாபம் கிடைப்பதாலும், செலவினம் குறைவு என்பதால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சவுக்கு பயிரிடுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றாா்.