செய்திகள் :

சாதிவாரி கணக்கெடுப்பு : `மாநில அடிப்படையில்தான் எடுக்க வேண்டும்’ - கி.வெங்கட்ராமன் I பகுதி 2

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

எழுத்து : கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதே நேரம், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால், இப்போது கணக்கெடுப்பை மேற்கொள்வதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்தளவில், ஏற்கெனவே சாதிப் பட்டியல் இருக்கிறது. அதிலிருந்து சில சாதிகளை இப்போது நீக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, சென்னை மாகாணமாக இருந்தபோது, ‘ஆதி ஆந்திரர்’ என்ற சாதி இருந்தது. இப்போது, ஆதி ஆந்திரர் என்றெல்லாம் நடைமுறையில் இல்லை. எனவே, இத்தகைய சாதிகளைக் கண்டறிந்து, பட்டியலிலிருந்து அவற்றை நீக்க வேண்டும்.

அதேபோல, 1956 நவம்பர் 1-ம் தேதி, மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, இங்கு யார் இருந்தார்கள், அவர்களின் வழித்தோன்றல்களாக இப்போது யார் இருக்கிறார்கள் என்ற விவரங்களை எல்லாம் எடுக்க வேண்டும். நடைமுறையில் இதுபோன்ற சில சிக்கல்கள் வரலாம். ஆனாலும், இத்தகைய விவரங்கள் கண்டறிய முடியாதவை அல்ல.

மக்கள் தொகை

சாதிவாரி கணக்கெடுப்பில், மாநிலம் தான் யூனிட் ஆக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மாறாக, ‘அகில இந்திய ரீதியில்’ என்று போனால், அதில் சிக்கல்கள் வரும். உதாரணமாக, தமிழ்நாட்டில் ‘கோனார்’ என்று சொல்கிறோம். சாதி சங்கங்கள் வந்த பிறகு, கோனார் சாதியை ‘யாதவ்’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘யாதவ்’ என்று சொன்னால், அதற்கு அகில இந்தியத் தன்மை வந்துவிடுகிறது. அதனால், உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் யாதவ், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் யாதவ், தமிழ்நாட்டில் யாதவ் என்று அழைக்கப்படும் கோனார் சாதி… இவை எல்லாம் ஒன்றுதான் என்ற பார்வை வருகிறது. அது, உண்மை அல்ல. ஆடு மாடு வளர்ப்பவர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்கள். அதற்காக ஆடு மாடு வளர்ப்பவர்கள் எல்லோரும் யாதவ் என்று சொல்லிவிட முடியாது. அப்படியென்றால், ஏசு நாதரையும் யாதவ் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் நாடார் சாதி இருக்கிறது. கேரளாவிலும் நாடார் என்ற பெயரில் ஒரு சாதி இருக்கிறது. இரண்டுக்குமான சமூக அந்தஸ்து ஒன்று கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் கோனாருக்கும், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் யாதவுக்கும் ஒரே சமூக அந்தஸ்து கிடையாது. அந்தந்த மாநிலங்களில் சாதிகள் இயல்பாக வேறுபட்டு நின்கின்றன. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதுதான் சரியாக இருக்கும்.

கி. வெங்கட்ராமன்

பட்டியல் வகுப்பு (எஸ்.சி) என்பது பல சாதிகளைக் கொண்டது. அதேபோல, பட்டியல் பழங்குடி (எஸ்.டி) என்பது பல பழங்குடியினரைக் கொண்டது. எஸ்.சி பட்டியல் சமூகத்தில் இடம்பெற்றிருக்கும் சாதிகளும், பழங்குடியினரும் தீண்டாமைக்கு உள்ளானவை. இந்த அளவுகோளை வைத்து எஸ்.சி., எஸ்.டி பிரிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன. எஸ்.சி., எஸ்.டி பட்டியல்களில் இடம்பெறும் பிரிவுகள் அனைத்தும் வெவ்வேறானவை. உதாரணமாக, தமிழ்நாட்டில் ‘பறையர்‘ என்ற சாதி இருக்கிறது. ‘WORLD PARAYAS‘ என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் என்பதால், உலகம் முழுவதும் பறையர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. பறையர் என்ற சமூகம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில், பறையர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என்று பட்டியல் வகுப்பில் மூன்று பெரிய சாதிகள் இருக்கின்றன. பறையர் என்றால், அதற்குள் சாம்பவர் என்பது போன்ற பல உட்சாதிகள் இருக்கின்றன. அதுபோல, தேவேந்திரகுல வேளாளரில் பல உட்சாதிகள் இருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எஸ்.சி பட்டியலில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர் சாதிக்கும், அருந்ததியர் சாதிக்கும் இடையே கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து போன்றவற்றில் பெரும் இடைவெளி இருக்கிறது.

பட்டியல் பழங்குடியில், ஒரே பெயரில் வேவ்வேறு மாநிலங்களில் இருப்பார்கள். ஆனால், அவர்களின் சமூக அந்தஸ்து வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக, ‘மலையாளி’ என்ற சாதி, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், அந்திராவிலும், கர்நாடகாவிலும் இருக்கிறது. ஒரே பெயரில் இருப்பதாலேயே அவர்கள் அனைவரும் ஒன்று என சொல்ல முடியாது. ‘மலையாளி’ என்றால், இவர்கள் மலையாளம் பேசுவர்கள் என்று அர்த்தம் கிடையாது. மலையில் இருந்தவர்கள் என்பதால், அவர்கள் மலையாளி. அவ்வளவுதான். மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிக்கும், ஆந்திராவில் இருக்கும் மலையாளிக்கும் இடையே சமூக அந்தஸ்து வித்தியாசப்படும். அதனால், ‘பிற்படுத்தப்பட்ட’, ‘பட்டியல்’ ஆகிய இரண்டையுமே அந்தந்த மாநிலத்தை அடிப்படை அளவுகோளாக வைத்து கணக்கெடுக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பின்போது, சாதி, அந்த சாதியைச் சேர்ந்தவர்களின் பின்னணி ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டும். இது தொடர்பாக மண்டல் ஆணையத்தின் தலைவரான பி.பி.மண்டல் ஓர் அளவுகோள் வைத்திருக்கிறார். அதாவது, ‘பிற்படுத்தப்பட்ட’ என்றால் என்ன அர்த்தம் என்பதற்கு, தண்ணீர் எடுப்பதற்கு பெண்கள் எவ்வளவு தூரம் போகிறார்கள், பள்ளிக்கூடத்துக்கு எவ்வளவு தூரம் போகிறார்கள், கோவிலுக்குள் அவர்களால் எவ்வளவு தூரம் போக முடிகிறது… என்று இந்த மாதிரி நிறைய அளவுகோள்களை மண்டல் வைத்திருக்கிறார்.

சாதியின் பெயர், சாதியின் மக்கள்தொகை ஆகியவற்றை மாநிலத்தை அடிப்படையாக வைத்துப் பிரிக்க வேண்டும். அப்போதுதான், உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முடியும். குவாண்டிட்டி, குவாலிட்டி ஆகிய இரண்டும் கணக்கெடுப்பில் வர வேண்டும். அதாவது, ஒரு சாதியில் எவ்வளவு மக்கள் (Quantity) இருக்கிறார்கள் என்பது ஒன்று. அதேபோல, அவர்கள் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறார்கள், எவ்வவு தூரம் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு தூரம் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார்கள் (Quality) என்று பார்க்க வேண்டும். குவான்டிட்டி, குவாலிட்டி இரண்டையுமே மாநிலத்தை அடிப்படையாக வைத்துதான் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்தளவில், இங்கு ஏற்கெனவே பட்டியல் இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட இங்கு சாதிவாரி கணக்கை சரியாக எடுத்திருக்கிறார்கள். எனவே, இங்குள்ள பட்டியலை மண்டல் குழு அப்படியே எடுத்துக்கொண்டது.

இதில், இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. அதாவது, சாதி சங்கங்கள் அதிகரித்த பிறகு, பல்வேறு சாதிகளை ஒரே பெயரில் அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, படையாண்டவர், படையாச்சி, ராயர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட சாதிகள், வன்னியர் சங்கம் வந்த பிறகு ஒரே பெயரில் அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரவரின் குல மரபு சார்ந்து சாதிப்பெயர்கள் இருக்கும். ஆனால், அந்த ஒவ்வொரு சாதியினரின் சமூக அந்தஸ்து (Social status) வெவ்வேறானதாக இருக்கும்.

அப்படியிருக்கும்போது, எல்லோரையும் ஓர் அடைப்புக்குறிக்குள் கொண்டுவந்துவிட்டால், உண்மையை நிலையைப் பிரதிபலிப்பதாக அது இருக்காது. எனவே, உள்ளூரில் என்ன சாதி என்ற விவரங்களை ஆய்வுசெய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சாதிச் சான்றிதழ்களில் என்ன சாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, உண்மையான சாதிப் பெயரை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டியது அவசியம்.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்பின்போது, சாதி சங்கங்களிடம் கருத்து வேண்டுமானால் கேட்கலாம். அதைத்தாண்டி, எதையும் கேட்கக்கூடாது. ஏனென்றால், தங்கள் சாதியின் மக்கள்தொகை என்று அதிகமாகக் காட்டுவதற்காக, எல்லா பிரிவுகளையும் மொத்தமாக சேர்த்துச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. ‘நாங்கள் ஆண்ட பரம்பரை’ என்று சொல்வார்கள். எல்லா சாதி சங்கங்களும், யாராவது ஒரு ராஜாவின் படத்தைப் போட்டுக்கொள்வார்கள். அதே நேரம், எங்கள் சாதி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு, பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருமே சூத்திரர்கள்தான். ராஜராஜனே சூத்திரர்தான். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், குஜராத் போன்ற வட மாநிலங்களில் மட்டும்தான் பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பிராமணர்களைத் தவிர, மற்ற எல்லோருமே சூத்திரர்கள்தான். பஞ்சமர் என்பது சூத்திரர்களில் கீழ்நிலையிலுள்ள ஒரு பிரிவாக இருக்கிறது. வட மாநிலங்களில் எஸ்.சி பட்டியலில் இருக்கும் எல்லா சாதிகளுமே ‘புறச்சாதி’ (outcaste) எனப்படும் அவர்ணர் தான். இதை அம்பேத்கரே சொல்லியிருக்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படி அல்ல. இங்கு, ஏகலைவன் கதையெல்லாம் எடுபடாது. இங்கு எல்லா சமூகங்களிலும் படித்தவர்கள் உண்டு. அதைத்தான், கீழடி, சிவகளை போன்ற இடங்களில் பார்க்கிறேம். பானையில் கணக்கு எழுதியர்கள் எல்லோரும் பெண்கள். இங்கு, பெண் பால் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். விஜயநகரப் பேரரசுக்குப் பிறகுதான் எல்லாம் இங்கு மாறுகிறது.

தமிழ்நாட்டின் பழைய கோவில்களில் எல்லா சமூகங்களுக்கும் மண்டகப்படி இருக்கிறது. உதாரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் மண்டகப்படி இருக்கிறது. நிற்பதில் இடைவெளி வித்தியாசம் இருக்கும். ஆனாலும், எல்லா தெருவுக்குள்ளும் சாமி போய்வரும். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்பது இருக்கும். ஆனால், எந்த கோவிலிலும் சாமி கும்பிடக் கூடாது என்ற நிலை இல்லை. எல்லா கோயிலிலும் எல்லோரும் சாமி கும்பிடலாம். ஆனால், நின்று கும்பிடக்கூடிய தூரத்தில் இடைவெளி இருக்கும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பைப் பொருத்தளவில், சமூகத்தின் உண்மை நிலைகள் அதில் வெளிப்பட வேண்டும். தற்போது ஒன்றியத்தில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வைப் பொருத்தளவில், இதில் சில குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பல சாதிகளையும் ஒரு பெயரில் ஒன்றாக்கி வகைப்படுத்துவதால், தங்களுக்கு சாதகமாக வாக்கு வங்கியை உருவாக்க உதவும் என்று நினைப்பார்கள். அதை ஏற்க முடியாது. மேலும், சாதிவாரி கணக்கெடுப்பில் அந்தந்த மாநில அதிகாரிகளைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களை சுதந்திரமாகச் செயல்படவிட அனுமதிக்க வேண்டும். அதில், எந்த அரசியல் குறுக்கீடும் இருக்கக்கூடாது!

(தொடரும்..!)

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க

கழுகார்: ஜெயக்குமார் மரண வழக்கு; தற்கொலை என முடிக்க ஆலோசனை? டு அடுத்தது யார்? கிலியில் அமைச்சர்கள்!

தற்கொலை என முடிக்க ஆலோசனை?""நெல்லை காங்கிரஸ் பிரமுகர் மரண வழக்கு...நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ... மேலும் பார்க்க

`பாஜக-வோடு கூட்டணி இல்லை என பேசிய ’சூனாபானா’ பழனிசாமி, எதற்காக...' - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பான... மேலும் பார்க்க