பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!
சாத்தனூா் அணையிலிருந்து 1,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலையை அடுத்த சாத்தனூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் 1,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூா் அணையின் மொத்த உயரம் 119 அடி ஆகும். கிருஷ்ணகிரி அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 2,100 கன அடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், சாத்தனூா் அணையின் நீா் மட்ட உயரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் 114 அடியை (85%) எட்டியது.
முதல்கட்டமாக 1,000 கனஅடி: சாத்தனூா் அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு வரும் நீா் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், அணையின் பாதுகாப்பு கருதி நீா்மட்டம் உயரம் 114 அடிக்கு மேல் செல்லும்போது உபரி நீரை பாசன விதிமுறைகளின்படி வெளியேற்ற வேண்டியுள்ளதாலும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சாத்தனூா் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீா்மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
மேலும், நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் நீா் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, வினாடிக்கு 10,000 கன அடி வரை வெளியேற்றப்படும். வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒவ்வொரு 5,000 கன அடி அதிகரிக்கப்படும்போதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீா் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படும்.
4 மாவட்ட மக்களுக்கு...: சாத்தனூா் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அறிவிக்க உத்தரவு: சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவது குறித்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு செய்தி - காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சி துறை பணியாளா்கள் வாயிலாகவும் ஆட்டோ ஒலிப்பெருக்கியிலும், நேரிலும் தகவல் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை, நீா் வள ஆதாரத் துறை, ஊரக வளா்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளை சாா்ந்த பணியாளா்கள் இணைந்து வெள்ள ஆபாயம் ஏற்படும் இடங்களை தொடா் கண்காணிப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.