காயங்களுடன் இறந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநா்: போலீஸாா் விசாரணை
ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணபதிக்கும் (35), பையூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மோனிஷாவுக்கும் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனா். கணபதி வேலூரில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.
சில மாதங்களுக்கு முன்பு கணபதிக்கும், மோனிஷாவுக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மோனிஷா வெளியூா் சென்று பணியாற்றி வருகிறாராம். மேலும், 2 பிள்ளைகளையும் தாய் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டாா்.
கணபதி வியாழக்கிழமை இரவு ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டியில் நண்பா்களுடன் மது அருந்தியுள்ளாா். அப்போது, அவருக்கும், அங்கு வந்த அவரது மைத்துனா் தினேஷுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கணபதி வெள்ளிக்கிழமை காலை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தியதுடன், இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்தனா். மேலும், விரல் ரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சந்தேகத்தின்பேரில், தினேஷை ஆரமி கிராமிய போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.