சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்
ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள நில் கவனி நேசி எனும் விழிப்புணர்வு குறும்படம் அண்மையில் தயாரிக்கப்பட்டது.
இந்த குறும்படம் வெளியீட்டு விழா காவலர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் கி.சங்கர் தலைமை வகித்து குறுந்தகட்டை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பாதுகாப்பான பயணம் மற்றும் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகள் குறித்த மாணவர்களின் நடன கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகள் சம்பந்தமான வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பரிசு தொகையை ஆணையர் வழங்கினார். நிகழ்வில் காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தம் உள்பட 1,500 கல்லூரி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ரீல்ஸ்களை தயார் செய்து செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் அக். 5ஆம் தேதி வரை பெயர், தொடர்பு எண், சமூக வலைதள முகவரி ஆகியவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதில் சிறந்த விழிப்புணர்வு ரீல்ஸ்களை தேர்வு செய்து, முதல் பரிசாக ரூ.20,000/-, 2-ஆம் பரிசாக ரூ.15,000/-, 3-ஆம் பரிசாக ரூ.10,000/ மற்றும் 20 போட்டியாளர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்புப் பரிசும், கலந்து கொள்ள அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94458-25100 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.