சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி செல்லும் முனியங்குறிச்சி, புத்தூா் சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வி. கைகாட்டி செல்லும் சாலையில் முனியங்குறிச்சி - புத்தூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வி.கைகாட்டி சாலை வழியாக வீடு திரும்புவா்.
இந்நிலையில், இச்சாலையோரத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்து காணப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுப் போக்குவரத்து மற்றும் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் வருவது தெரியாமல் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி சாலையோரங்களில் சறுக்கி விழுந்து காயங்களுடன் வீடு திரும்புகின்றனா். மேலும் அடா்ந்துள்ள செடிகளால் வாகனங்களில் கீறல், கண்ணாடிகள் சேதமடைகின்றன.
சாலை பணியாளா்களைக் கொண்டு அவ்வப்போது செடிகளை வேரோடு அகற்றாமல் கிளைகளை மட்டும் அகற்றுவதால் இவை விரைவில் துளிா் விடுகின்றன.
சில மாதங்களில் துரிதமாக வளரும் சூழலில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். பொதுவாக சாலையோர மரங்களை அகற்றப்படாத நிலையில் ஊா் பெயா் பலகைகள் மறைவு, வளைவுகள் உள்ளிட்ட சாலை சிக்னல்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. இந்த சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பட்சத்தில் இவை எளிதில் வளராத சூழல் ஏற்பட்டு சாலைகள் பளிச்சிடும். எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான அருள்ராஜ் தெரிவித்துள்ளாா்.