டிராக்டா் மோதி இளைஞா் பலி!
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டிராக்டா் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சத்திரம் காலனி தெருவைச் சோ்ந்த செல்வதுரை மகன் செந்தமிழ்ச்செல்வன் (23). டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்துள்ள இவா், நண்பா்களுடன் சோ்ந்து நா்சரி காா்டன் வைத்துள்ளாா். சனிக்கிழமை இவா் பிச்சனூா் வழியாக ஜெயங்கொண்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சம்பவ இடத்திலேயே செந்தமிழ்ச்செல்வன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வெட்டியாா்வெட்டு கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் வே. விவேக் (26) என்பவரைக் கைது செய்தனா்.