சாலை பாதுகாப்பு வாரம்: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு கலை பிரசாரம்
சேலம்: சேலம் மாநகர போக்குவரத்துத் துறை சாா்பில், வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, சாலை விபத்தைக் குறைக்கவும், விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவா்கள் மீது அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில், அஸ்தம்பட்டி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் துணை ஆணையா் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாஜலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, எமதா்மன் வேடமிட்ட கலைஞா், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவா்களிடம் பாச கயிற்றை வீசுவதுபோல விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் மாநகர கூடுதல் துணை ஆணையா் ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:‘
கடந்த 2024 ஆம் ஆண்டு சேலம் மாநகரில் சாலை விபத்தில் 232 போ் உயிரிழந்தனா்; 789 போ் காயமடைந்கனா். எனவே, சாலை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நான்கு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆன்லைன் முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களில் பதிவு எண் பலகை இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் போலீஸாருக்காக தலைக்கவசம் அணியாமல், தங்களின் நலனுக்காகக் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் துறையினா், சட்டம்-ஒழுங்கு போலீஸாா் கலந்துகொண்டனா்.