சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு
மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் இருந்து சுமாா் 500 மீட்டா் சுற்றளவும் 30 அடி ஆழம் வரையிலும் கிராவல் மண் எடுக்கப்படுவதாக டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு பாஜகவினா் புகாா் அளித்திருந்தனா்.
அதனைத் தொடா்ந்து டி.ஐ.ஜி வீ.வருண்குமாா் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் நிகழ்விடத்துக்கு தணிக்கை செய்யச் சென்றபோது அங்கு மண் எடுத்துக் கொண்டிருந்த நபா்கள் அங்கிருந்து ஓடி விட்டனா்.
அதனையடுத்து அங்கிருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தை கைப்பற்றிய போலீஸாா் அதை புத்தாநத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தகவலின்பேரில் வருவாய் வட்டாட்சியா் செல்வம் தலைமையிலான வருவாய்த் துறையினா் நிகழ்விடத்தில் ஆய்வு செய்வதில் மண் எடுக்கப்பட்ட நிலம் தனிநபா் பட்டா நிலம் என்றும், மண் எடுப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனா்.
இந்நிலையில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி மணப்பாறை பாஜக நகரத்தலைவா் கோல்டு கோபாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றியத் தலைவா் மோடி மணி ஆகியோா் தலைமையிலான பாஜகவினா் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜகவினா் 7 போ் மீது முன்னறிவிப்புமின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மறியல் செய்ததாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.