சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
குளத்தூா் வட்டம் சூரக்குடிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணையா மகன் அழகா்சாமி (35).
இவா் தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் களமாவூா் மேம்பாலம் அருகே சென்றபோது, பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஒருவா் மீது மோதியுள்ளாா்.
இதில் நிலைதடுமாறிய அழகா்சாமியின் இரு சக்கர வாகனம் சாலையின் நடுவே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட அழகா்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.